Showing posts with label பழநி. Show all posts
Showing posts with label பழநி. Show all posts

Saturday, June 26, 2010

முருகனுக்கு அரோகரா...

கடந்த இரு வாரங்களுக்கு முன் என் பதினோரு மாத மகளுக்கு முடிகாணிக்கை செலுத்த (வழக்கம்போல மனைவின் வேண்டுதல்தான்) பழநிக்கு போயிருந்தேன்.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் இதே போல மகனுக்கும் முடிகாணிக்கை செலுத்த சென்ற போது நேர்ந்த சில கசப்பான அனுபவங்களால், இந்த முறை கொஞ்சம் தெளிவாக கடவுளை மட்டுமே தரிசித்து வருவதாக திட்டமிட்டு தொடங்கியது பயணம்.

மாசி மகத்தை முன்னிட்டும், ஞாயிற்றுக்கிழமையின் ஆதிக்கமும் மின்இழுவை இயந்திரத்தில் செல்ல நின்ற வரிசையால் (ஐம்பது ரூபாய் சிறப்பு கட்டணத்திலும் குறைந்தபட்சம் நர்ன்கு மணி நேர காத்திருக்க வேண்டும்) யானைபாதை படிக்கட்டுகளின் வழியாக மாறியது மலை மேலே செல்லும் பயணம்.

பொது தரிசனத்திற்கும், பத்து ரூபாய் தரிசனத்திற்குமான வரிசையால் (குறைந்தபட்சம் மூன்று மணிநேர காத்திருப்பு) நூறு ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டை எடுத்து அங்கு போனால் என்னைப்போலவே பல மனிதர்களின் மனநிலையால் அங்கும் காத்திருத்தல் என்பதன் கட்டாயத்தில் ஒன்றரை மணி நேர அவஸ்தையான நிமிடங்கள்.

சன்னதியில் இருக்கக் கிடைக்கும் அந்த சொற்ப வினாடிகளுக்குள் தனது மனதின் அத்தனையும் கொட்டித்தீர்த்துவிடக்கூடிய மனநிலையிலும், கட்டாயத்திலும் இருக்கும் மனிதர்களை நகர்த்துவதைத்தவிர வேறொன்றும் அறியாததுபோல இயந்திரமாய் இருந்த மனிதர்களும், அதைவிட அதிகமாய் வரும் மக்களின் காணிக்கையிலே குறியாய் இருக்கும் ...

எல்லாவற்றையும் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கும்.. முருகன்..

நல்ல வேளையாக எனக்கும் கடவுளுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருந்ததால் மனிதர்களின் அந்த நிமிடத்து உணர்வுகளை எனக்கு உள்வாங்கிக் கொள்ள கிடைத்த இன்னொரு வாய்ப்பாகவே இந்த பழநியின் மற்றுமொரு பயணம்.
ஒரே ஒரு ஆறுதலான விஷயமாக நான் பார்த்தது..
வெய்யிலின் உக்கிரத்திலிருந்து நமது பாதங்களை சற்றே ஆசுவாசப்படுத்த மலைப்படிகளின் ஒரு பகுதியில் பிளாஸ்டர் ஆப் பாரீசின் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.

கட்டயாம் சந்திக்க வேண்டியவை
• முன் பின் அறிமுகமே இல்லையென்றாலும் கோவிலுக்கு இந்த வழியாக செல்லுங்கள் என பேருந்து நிலையத்தில் இருந்து வெளிப்படும் குடும்ப உறுப்பினர்களை வழி நடத்தும் மனிதர்கள். (குதிரை வண்டி உரிமையாளர்கள்? வியாபார தந்திரம்)
• வயதான மனிதர்களின் மேற்பார்வையில் வயதான குதிரைகள் இழுத்துச் செல்லும் குதிரை வண்டிப்பயணம்.
• "கோயிலுக்கு செருப்புப் போட்டுட்டு போகக்கூடாது எங்க கடையில விட்டுட்டு பூஜை சாமான் வாங்கிட்டுப் போங்க... செருப்பு பார்த்துக்க காசு வேணாம்..."
• "சாதாரணமா 40 வாங்கறோம், நல்லபடியா முடி எடுத்துத் தர்ரேன் பார்த்து போட்டுக்குடுங்க..சார். "
• ரோட்டில் நடக்கும் நம்மை வழிமறித்து சிறிய வேல் ஒன்றை நமது கையிலோ அல்லது காவடி எடுத்து வந்தால் காவடியிலோ செருகி விட்டு முடியில்லா தலையில் சந்தனம் பூசி "முருகா நல்லபடியா இவங்க குடும்பத்தை காப்பாத்து" என பத்து ரூபாய்க்கும் அதிகமாய் வாங்கும் வியாபார மனிதர்கள்.
• காலணிகள் பாதுகாக்கும் இடத்தில் நின்ற காத்திருத்தல் வரிசையும்
• ருசியில்லா இயந்திர பஞ்சாமிர்தம்
• குடும்ப சகிதம் வந்திருந்து படிகளிலோ மரங்களின் அடியிலோ கட்டுச்சோற்றை ருசிக்கும் மனிதர்கள்.
இன்னும் நிறைய...